Wednesday, April 1, 2009

மனம் கவர்ந்த ஓவியர்கள்

ஒருவர் கையெழுத்தை வைத்து இன்னார் எழுதினார் என்று கண்டுபிடிக்கிறது ஓரளவுக்கு சுலபம் தான். சில நேரங்களில், இது அச்சு அசல் அவரோட கையெழுத்து மாதிரியே இருக்கே என்று நம் நண்பர்கள் சொல்லிக் கேள்விப் படுகிறோம், அல்லது நாமே பார்க்கிறோம். ஆனால் ஓவிய‌த்தைப் பொருத்த‌வ‌ரையில், இவர் அவ‌ர் மாதிரியே வ‌ரைகிறார் என்று இது வ‌ரை நாம் கேள்விப்பட்டதில்லை.

ஒவ்வொருத்தரும் தங்களுக்கென்று த‌னி ஸ்டைல் வ‌குத்துக் கொண்டார்க‌ள். எப்ப‌டி இந்த‌ மாதிரி ஒரு நிலை ஏற்ப‌டுத்திக் கொண்டார்க‌ள் என்று ப‌ல‌ நாள் விய‌ந்திருக்கிறேன். கையெழுத்துப் போடுவ‌து கூட‌ ஒரு க‌லை தான். சில‌ர் கையெழுத்து அட்ட‌காச‌மா இருக்கும். ரூம் போட்டு, ப்ராக்டிஸ் ப‌ண்ணிருப்பார்க‌ளோ என்று கூட எண்ண‌த் தோன்றும். அதே போல‌ ஓவிய‌ர்க‌ளும் சில‌ ப‌யிற்சிக‌ள் மேற்கொண்டிருக்க‌லாம், வித‌ வித‌மா வ‌ரைந்து பார்த்து, ஒரு க‌ட்ட‌த்தில் திருப்தி ஏற்ப‌டுகையில், அதையே base style ஆக‌ ஆக்கியிருக்க‌லாம் என்று பின்னாளில் அறிந்து கொண்டேன்.

அந்த கால கட்டத்தில, ஆயிரத்து தொள்ளாயிரத்து என்பதுகளில் இருந்து இன்றுவரை கொடிகட்டிப் பறந்த / பறக்கும் ஓவியர்களைப் பற்றி:

ஓவியர் ஜெயராஜ், 'ஜெ...' என்று மூன்று புள்ளிக‌ள் வைத்து ஆர‌ம்பித்தார் என்று நினைவு. எல்லோரும் கையெழுத்து போடும் போது, அப்ப‌டி ஒரு கோடு போட்டு, கீழே ரெண்டு புள்ளி வைப்பார்க‌ள். அது போல‌த் தான் இவ‌ர் மூன்று புள்ளிக‌ள் வைக்கிறார் என்று எண்ணினேன். பின் ஒரு பேட்டியில், அவ‌ரே சொல்லியிருந்தார், அது அவ‌ர் குடும்ப‌ உறுப்பின‌ர்க‌ளின் எண்ணிக்கை என்று. சிம்ப்ளி சூப்ப‌ர். அப்புற‌ம் குடும்ப‌ம் பெரிதாக‌ ஆக‌ புள்ளிக‌ள் கூடிக் கொண்டே சென்ற‌தைப் பார்த்தேன். 'ஜெ'வின் ஓவியங்கள் அருமையான உருவங்கள் மற்றும் அதன் shades கொண்டு நம் கண்களைக் கவரும். செக்ஸியா வரையறதிலும் இவரை அடித்துக் கொள்ள ஆளில்லை அப்போது. சில strokes தான், படம் அப்படி ஒரு attractive-ஆ இருக்கும்.
உருவங்களுக்கு எந்த அளவிற்கு ஜெ முக்கியத்துவம் கொடுத்தாரோ, அந்த அளவிற்கு முகபாவத்திற்கு முக்கியத்துவம் தந்தவர் ஓவியர் மாருதி. சீற்றம், நாணம், அமைதி, வேகம், என்று இப்படி எந்த ஒரு ஓவியத்தை எடுத்தாலும், முதலில் நம்மைக் கவருவது அந்த முக பாவங்கள். அத்தனை தத்ரூபமாக வரைந்திருப்பார். வண்ணக் கலவையும் bold-ஆ இருக்கும்.
கார்ட்டூன்களில் ஓவியர் மதன் இன்றும் உயரத்தில் இருப்பதை நாம் யாரும் மறுக்க முடியாது. ஏழை விவசாயி ஆகட்டும், வாழும் பெரும்புள்ளி ஆகட்டும், அவரது கார்ட்டூன் பார்க்கும் போதே நம்மில் ஒரு சிறு புன்முறுவலாவது உதிர்வது உறுதி. ஓவியத்தையும் தாண்டி வரலாற்று படைப்புக்கள், கேள்வி பதில் என்று மேலும் தன்னை மெறுகேற்றிக் கொண்டவர்.
ஆரம்ப காலங்களில் ம‌.செ. அவர்களின் ஓவியங்கள் அந்த அளவிற்கு சிறப்புடையதாய் இல்லை என்றே சொல்ல வேண்டும். கல்கியின் பல காவியங்களுக்கு ஓவியம் தீட்டிய மணியம் அவர்களின் புதல்வர். நாள் செல்லச் செல்ல ம.செ.வின் ஓவியத்தில் அப்படி ஒரு perfection. அதற்கப்புறம் தன் ஓவியங்களில் பல‌ அற்புதங்கள் படைத்தவர். சாந்தம், நளினம், இறையவர்கள் என்று உருவங்களிலும் மற்றும் வண்ணக் கலவையிலும் மெலோடியான ஓவியர். இவரது ஒரு கிருஷ்ணர் ஓவியம் பார்த்து, வரைந்து இத்தளத்தில் பதிந்திருக்கிறேன்.
கார்ட்டூனிஸ்ட் சித்தார்த் அவர்களின் பல கார்ட்டூன்களைப் பார்த்து நான் வியந்திருக்கிறேன், பின் வரைந்திருக்கிறேன். கார்ட்டூன் என்று கண்டபடி கோடுகள் போடாமல் அற்புதமாக‌ வரையும் ஓவியர். 'சிம்பிள் தான் சூப்பர்' என்று இவரது கார்ட்டூன்களைப் பார்க்கும் போது நமக்குப் புரியும். சிம்பிளான கார்ட்டூன்களிலும் கூட சிறு சிறு செய்திகளையும் சேர்த்து ஒரு நேர்த்தியாகப் படைப்பதில் வல்லவர். இவரோட இன்ஸ்பிரேஷனில் வரைந்த படங்கள் சிலவற்றை இத்தளத்தில் பதிந்திருக்கிறேன்.
Abstract ஓவியங்களைப் பார்க்கையில் Modern Art அவ்வளவாகப் பிடிப்பதில்லை. நம் இஷ்டத்திற்கு ஒன்று வரைந்து, பிறருக்குப் புரியாத காரணத்தால் அதற்கு நேர் மாறாய் நிறைய விளக்கங்களும் தரலாம் என்பது என் தாழ்மையான கருத்து. ஆனால் மருது அவர்களின் கோட்டோவியங்கள் சில நேரம் நின்று பார்க்க வைக்கும். பென்சில் கொண்டு அவ்வளவு நேர்த்தியா கோடு போடுவதே கடினம். இவர் என்னடா என்றால் ப்ரஷ் கொண்டு விளாசி அற்புதமாய்க் கோட்டோவியம் போடுகிறார் என்று வியந்தது உண்டு.ஓவியர் அர்ஸ் படங்களும் ஆரம்பத்தில் அத்தனை ஈர்ப்புடையதாய் இல்லை. போகப் போக பல வித்தியாசங்கள் காண்பித்தவர். தொடர்கதைளில் கூட வித்தியாசமாகப் படம் வரைந்தவர். அதாவது ஒரு படத்தைப் பார்த்தால், அது இந்தத் தொடருக்கு வரைந்தது என்று கூறலாம். உருவங்கள், வண்ணங்கள் என்றில்லாமல், texture-லும் வித்தியாசம் காண்பித்தவர்.சிறு வயதில் வாரப் பத்திரிகை என்று படித்தால் அது கல்கண்டு தான். அப்பா தான் படிக்கத் தூண்டினார். நிறைய தகவல்கள் அதில் இருந்து தெரிந்து கொள்ளலாம் என்று. நமக்குப் பிடிச்சதோ அதில் வரும் தொடர்கதை. எழுதியவர் தமிழ்வாணனா அல்லது அவர் புதல்வர் லேனாவா என்று நினைவில் இல்லை. அதற்குப் படங்கள் வரைந்தவர் ஓவியர் ராமு. குடும்பப் படங்கள் என்றால் நினைவில் வருபவர். கதாபாத்திரங்கள் நம் மனதில் அழுத்தமாக பதியுமாறு இருப்பதற்கு இவரின் ஓவியமும் ஒரு காரணமாக இருக்கும்.இவர்கள் அனைவரையும் பற்றி சுருக்கமாக‌ச் சொல்ல வேண்டுமெனில்:

ஜெ - Soft & Sexy
மாருதி - Aggresive
மதன் - Captive Cartoons
ம.செ. - Mild & Sweet
சித்தார்த் - Creative Cartoons
மருது - Line dance
அர்ஸ் - Tender
ராமு - Old is Gold

இன்னும் பலர் இருக்கலாம். ஓவியர்கள் என்றவுடன் சட்டென்று மனதில் தோன்றியவர்களைப் பற்றி எனது எண்ணத்தை எழுதியிருக்கிறேன். உங்களுக்குப் பிடித்த/தெரிந்த ஓவியர்களைப் பற்றி பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

20 comments:

அன்புடன் அருணா said...

அட மாயாவை விட்டு விட்டீர்களே???!! ஸ்யாம் கூட நல்லா வரைவார்...நல்ல பதிவு.
அன்புடன் அருணா

நானானி said...

கோபுலுவையும் விட்டு விட்டீர்களே?
தில்லானா மோகனாம்பாள் ஒன்று போதுமே!!
ஜெ யின் போட்டோ எஃபக்ட் படங்கள் பிடிக்கும். அதுவரை யாரும் அப்படி வரையவில்லை.

சதங்கா (Sathanga) said...

அன்புடன் அருணா said...

//அட மாயாவை விட்டு விட்டீர்களே???!! //

இவர் பற்றி அவ்வளவா தெரியாதுங்க. அதான் எழுதல. நீங்க கொஞ்சம் விரிவா சொல்லுங்களேன்.

///ஸ்யாம் கூட நல்லா வரைவார்...நல்ல பதிவு.
அன்புடன் அருணா//

ம்ம்ம் ஷ்யாம் படங்கள் பார்த்திருக்கிறேன். நல்லா இருக்கும்.

சதங்கா (Sathanga) said...

நானானி said...

//கோபுலுவையும் விட்டு விட்டீர்களே?
தில்லானா மோகனாம்பாள் ஒன்று போதுமே!!//

"80களில் இருந்துனு", பதிவ லேசா எடிட் செய்திருக்கிறேன் :)))

கோபுலு, நடனம், சில்பி இன்னும் பல ஜாம்பவான்களின் படங்கள், மிகப் பழைய (50s to 80s) விகடன் தீபாவளி மலர்களில் பார்த்திருக்கிறேன். அதெல்லாம் நம்ம தாத்தாக்கள் கலெஷன்.

//ஜெ யின் போட்டோ எஃபக்ட் படங்கள் பிடிக்கும். அதுவரை யாரும் அப்படி வரையவில்லை.//

மிகச் சரி. நான் ஷேட்ஸ்னு சொல்லிட்டேன். ஆனா, போட்டோ எஃபக்ட் என்பது சரியான வார்த்தைப் பிரயோகம்

நானானி said...

பழசெல்லாம் ரீமிக்ஸ்ன்னு வருவது மாதிரி, பழைய ஜாம்பவான்களைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம், பாதகமில்லை.

தமிழ்ப்பறவை said...

எனக்குப் பிடித்த பதிவு. இது போல் நானொரு பதிவு போட எண்ணினேன். ஆனால் உங்கள் பதிவு போல் ரத்தினச்சுருக்கமாக இல்லாமல், அனுமார் வால் போல் விஷயங்கள் நீண்டதால் விட்டு விட்டேன்.
எனது ஃபேவரிட் மாருதிதான்.எனக்கும் முதலில் அரஸின் ஓவியங்கள் பிடிக்கவில்லை. பின் அதன் ஆழம் தெரிந்தவுடன் பிடித்தது. ம.செ பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.அவரின் பாணியிலில்லாமல் நீர் வண்ணத்தில் வைரமுத்து ஓவியம் வரைந்திருப்பார். அருமையாக இருக்கும்.(புலியைப் பார்த்து நான் போட்டுக்கொண்ட சூடு கூட பரவாயில்லாமல் இருந்தது).
மாருதியை எனக்கு நினைவுக்கு வர ஆரம்பித்தது ‘தினமணி கதிரில்’ பிரபஞ்சனின் ‘வானம் வசப்படும்’ தொடர்கதைக்கு வரைந்த ஓவியங்கள். அதன் ஹீரோவும் ஓவியர்(தாவீது). குறுந்தாடியுடன் வரைந்திருப்பார். அதுபோக அவரின் கதாநாயகிகள்,அவர்களின் முகங்கள்,சிரிப்பு,ஒளிக்கதிர் தெறிக்கும் கேசம், கன்னக்குழி,கழுத்தில் வரையும் சங்கிலி இப்படி எவ்வளவோ...’கண்மணி’ அட்டைப்பட ஓவியங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். ஒரு குறிப்பிட்ட சமயத்தில் வாசகிகள் அனுப்பும் அவர்களின் படங்களையும் வரைந்து அட்டைப்படத்தில் வெளியிட்டார்கள். (மாருதியின் தூரிகை பட்ட அதிர்ஷ்டசாலி வாசகிகள்)....

ம.செ.யின் ஓவியங்களில் எனக்குப் பிடித்த அம்சம், கதைக்களனையும், சுற்றுப்புறத்தையும் அழகாக டீடெய்லாகக் கொடுத்துவிடுவார்.(கள்ளிக்காட்டு இதிகாசம்)....

ஜெ...யின் படங்கள் என்றால் கண்முன் வருவது முடிதிருத்தும் நிலையங்களில் படித்த ராணிதான்.அப்புறம் அப்புசாமி-சீதைப் பாட்டி தொடர்.அபாரம்....

ராமு அவர்களின் அதிக ஓவியங்களை ‘தினமணி கதிர்’ மூலம்தான் நான் அறிந்து கொண்டேன்.ராமு என்றால் என் நினைவுக்கு வருவது கண்ணாடி போட்ட வயதான அப்பா கேரக்டர் ஓவியம்தான்...

இத்தொடரில் ஷ்யாமையும் சேர்த்திருக்கலாம். சமீப கால ஓவியர்களில் குறிப்பிடத்தக்கவர். பாக்யாவில் பா.விஜயின் உடைந்த நிலாக்கள் தொடருக்கு இவரின் ஓவியங்கள் தனிக்கவிதை.இவரின் ஓவியக் கதாநாயகிகளும் அழகுதான். ஒல்லியான முகவாகு, கூரான நாசி, நீள் கூந்தல் எனப் பின்னிவிடுவார்(கூந்தலை அல்ல)...

இது தவிர ஜே.பி(ஜே.பிரபாகரன்) அவர்களின் கோட்டோவியங்கள் எனக்குப் பிடிக்கும்.ஆனந்த விகடனில் வந்த ஆன்மிகத் தொடருக்காக கோயில்கள் வரைந்தவர்.
ஆனந்தவிகடனில் சில பிரபலங்கள் பற்றிய தொடருக்கு பாண்டியன் என்பவர் வரைந்த ‘போர்ட்ரெய்ட்’கள் தத்ரூபமாக இருக்கும்.

தினத்தந்தியில் நடிக,நடிகைகளை கார்ட்டூன் வடிவில் வரையும் ‘நிமல்’(நிர்மல்...?) ,சிறுவர்மலரில் சித்திரக்கதைகளுக்கு ஓவியம் வரைபவர், பாக்யா இன்னும் சில சிறு பத்திரிக்கைகளில் வரையும் மஹேஸ், கண்ணா என இன்னும் பல பேரைச் சொல்லலாம்.(ஆனால் இவர்களெல்லாம் உங்கள் மனம் கவர்ந்த ஓவியர்களா என எனக்குத் தெரியாது). என்னைப் பாதித்தவர்களைச் சொன்னேன்.இப்போதைக்கு நிறுத்திகிறேன்...

dharshini said...

மாருதியின் குண்டு கண்ணங்கள், மிகவும் அழகாக இருக்கும். ஷ்யாமை பற்றி கண்டிப்பாக சொல்லியிருப்பிர்கள் என‌ நினைத்தேன். பரவாயில்லை, அவ‌ரும் நன்றாக வரைவார்(எந்த கேரக்டராக இருந்தாலும்). அவரைப்பற்றி தெரியாது,ஒருபத்திரிக்கையில் எல்லாருடைய ஓவியங்கள் போல( ம.செ, மாருதி, ஜெ) வரைந்திருந்தார். அவரவர் ஸ்டைலிலேயே அசத்திவிட்டார்.

சதங்கா (Sathanga) said...

நானானி said...

//பழசெல்லாம் ரீமிக்ஸ்ன்னு வருவது மாதிரி, பழைய ஜாம்பவான்களைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம், பாதகமில்லை.//

நிச்சயமா !!! ஆனால் அவர்களைப் பற்றி அதிகம் தெரியாது. அதுவுமில்லாமல் அந்தப் புத்தகங்கள் இந்தியாவில் இருக்கிறதே:)))

சதங்கா (Sathanga) said...

தமிழ்ப்பறவை,

வாங்க வாங்க. அடேங்கப்பா, உங்க பதிவை அப்படியே இங்கே பின்னூட்டி விட்டீர்கள் என எண்ணுகிறேன். மிக்க மகிழ்ச்சி :))

'ஷ்யாம்' பற்றி சொல்லாததற்கு, முந்தி அளவிற்கு வாரப் பத்திரிகைகள் இப்ப வாசிக்க முடியவில்லை, அதனாலேயோ என்னவோ :((

நீங்க குறிப்பிட்டதுல 'ஜே.பி'யின் கோட்டோவியங்கள் பார்த்திருக்கிறேன். அற்புதமாக போட்டிருப்பார். நினைவு கூர்ந்தமைக்கு மிக்க நன்றி.

சிறுவர் மலர் என்றவுடன் இருவர் ஞாபகத்துக்கு வருகிறார்கள். அம்புலிமாமவில் சங்கர், பாலமித்ராவின் செல்லம் (என்று நினைக்கிறேன்). இன்றும் இவர்கள் படங்கள் கண்ணுக்குள்ளே !!!

தமிழ்ப்பறவை said...

//பாலமித்ராவின் செல்லம்//
அடடா இவரை மறந்திட்டேனே....
குங்குமம், முரசொலியில் இவர் வரைந்த அரசியல் தலைவர்கள் கார்ட்டூன் மற்றும் படங்கள் எனக்கு மிகவும் பிடித்தவையாக இருந்தது...
இப்போது முரசொலி படிப்பதில்லை..

சதங்கா (Sathanga) said...

dharshini said...

//மாருதியின் குண்டு கண்ணங்கள், மிகவும் அழகாக இருக்கும். //

ஆமா. அதே போல சிலரை வாழ்வில் பார்க்கும்போது, மாருதி தான் முதலில் மனதில் வருகிறார் :))

//ஷ்யாமை பற்றி கண்டிப்பாக சொல்லியிருப்பிர்கள் என‌ நினைத்தேன். பரவாயில்லை//

மன்னித்துக் கொள்ளுங்கள் சகோதரி. தமிழ்ப்றவைக்கு சொன்ன பதில் உங்களுக்கு ரிப்பீட்டிக்கறேன்...

ஷ்யாம் பற்றி கூடுதல் தகவல்களுக்கு மிக்க நன்றி !

Mrs.Faizakader said...

ஓவியம் வரைவதுடன் மட்டும் இல்லாமல் அவர்கள் பற்றியும் அழகாக சொல்லியிருக்கிங்க.அருமை. நானும் தெரிந்துக்கொண்டேன்.

சதங்கா (Sathanga) said...

//குங்குமம், முரசொலியில் இவர் வரைந்த அரசியல் தலைவர்கள் கார்ட்டூன் மற்றும் படங்கள் எனக்கு மிகவும் பிடித்தவையாக இருந்தது...//

கூடுதல் தகவலுக்கு நன்றி தமிழ்ப்பறவை !!!

//இப்போது முரசொலி படிப்பதில்லை..//

நான் என்றைக்குமே :))

சதங்கா (Sathanga) said...

Mrs.Faizakader said...

//ஓவியம் வரைவதுடன் மட்டும் இல்லாமல் அவர்கள் பற்றியும் அழகாக சொல்லியிருக்கிங்க.அருமை. நானும் தெரிந்துக்கொண்டேன்.//

வாத்தியாருங்களைப் பற்றி ரொம்ப நாளாவே பதிவு போடணும் என்கிற ஆசை, சில ஆண்டுகள் கழித்து இப்ப தான் கிடைச்சிருக்கு. அவர்களை, நீங்கள் அறிந்து கொண்டதில் மட்டற்ற மகிழ்ச்சி.

இரா. வசந்த குமார். said...

அன்பு சதங்கா...

இன்னும் விரிவாக ஒவ்வொருவரைப் பற்றியும் எழுதி இருக்கலாம் என்பது என் எண்ணம்.

எனது சில பதிவுகள் ::

படம் காட்டுகிறோம்.சென்னையில் ஒரு விழாக்காலம்.

KABEER ANBAN said...

ஓவியர் பத்மவாசன் அவர்களும் மிகவும் குறிப்பிடத் தகுந்தவர். அவர் பொதுவாக சமூகப் பத்திரிக்கைகளுக்கு வரைந்து பார்த்ததில்லை. ஆன்மீகப் பத்திரிக்கைகளில் அவரது இறைச்சித்திரங்கள் தெய்வீக மணம் கமழும். ஓவியர் சில்பியை மானசீக குருவாகக் கொண்டு இலங்கையிலிருந்து பயணித்து அவரை சந்தித்து அவரது ஆசியுடன் ஓவிய பணியை ஒரு இறைவழிபாடாக செய்து வரும் இளைஞர் அவர்.

சங்கணேசன் said...

ஒவ்வொருவருக்கும் ஒரு வரை நடை (உரை நடை மாதிரீங்க..)

தெளிவான பதிவு ஓவியர்களைப்பற்றி.

உங்களின் mail-id என்னவென்று சொல்லுங்கள் நான் வரைந்த சில படங்களை பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன் உங்கள் அனுமதியுடன்..

Information said...

ஓவியர்களைப் பற்றிய சிறந்த அலசல்

வை.கோபாலகிருஷ்ணன் said...

இதைப்படித்துப்பார்த்ததும் மிகவும் வியந்து போனேன். எவ்வளவு ஒரு கலை நுணுக்கத்துடன், ரசித்து ஆராய்ந்து, ஒவ்வொருவரைப் பற்றியும் அவர்களின் தனிதிறமைகள் பற்றியும் வெகு அழகாகக் கூறியுள்ளீர்கள்.

தாங்கள் வரைந்துள்ள அந்த 2 கார்ட்டூன் படங்களும் நல்ல அழகாகவே வந்துள்ளன.

ஓவியர் கோபுலுவைப்பற்றி ஏனோ எழுதாமல் விட்டு விட்டீர்களே என்ற குறை எனக்கு.

திரு. சாவி [சா. விஸ்வநாதன்] அவர்கள் எழுதி ஆனந்தவிகடனில் 1963 ஆம் ஆண்டு 11 வாரத்தொடராக வெளிவந்த “வாஷிங்டனில் திருமணம்” என்ற நகைச்சுவைக்கதை, மாபெரும் வெற்றி பெற்றதற்கு பாதிக்காரணம் திரு கோபுலு அவர்களின் சித்திரங்கள் தான் என்று திரு சாவி அவர்களே தன்னுடைய முன்னுரையில் ஒத்துக் கொண்டுள்ளார்.

தங்கள் பதிவு மிக அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

அன்புடன் vgk அண்ணா.

சமுத்ரா said...

any link to their drawings online?