Wednesday, July 2, 2008

குசேலா ..... இக்கடச் சூசூசூடு !



வழக்கம் போல ரஜினியின் இந்தப் படத்திற்கும் ஏகப்பட்ட விளம்பரங்கள் வந்து கொண்டிருக்க ... சில வாரங்கள் முன்னர், என் நண்பன் ஒருவன் குசேலன் ஸ்டில்ஸ் அனுப்பியிருந்தான். படங்களைப் பார்க்கும்போதே தெரிந்தது இந்தப்படமும் சூப்பர் ஹிட் தான் என்று. அந்த அளவிற்கு அசத்தல். (ச‌மீபத்தில் பாடல்கள் கேட்டதில் இருந்து இந்த நம்பிக்கையில் சற்று சருக்கல் !)

அண்ணாமலை, எஜமான் டைப்ல ஸ்டில்ஸ் வருதேனு பார்த்துக்கிட்டே வந்தா, சட்டென நம்மை ஈர்த்தது இந்த 'ராஜாதி ராஜா' ஸ்டைல் ஸ்டில்.

கொசுவத்தி : எண்ணிக்கையில்லாமல் அந்த ஸ்டில்ல எத்தன முறை நண்பர்களுக்கு வரைந்து தந்திருப்பேன். அப்போது கல்லூரி பருவம். தேவகோட்டையிலிருந்து, காரைக்குடி சென்றோம் நண்பர்கள் சிலர். பாண்டியன் தியேட்டர் என நினைக்கிறேன். என்னா கூட்டம். அழகப்பா என்ஜினியரிங் மாணவிகள் அத்தனை பேரும் அங்கு தான். அட போங்கப்பா, சென்னையாவது, மும்பையாவது. நுனி நாக்கு ஆங்கிலம், வெள்ளைத் தோல், அட்டகாச ட்ரெஸ்ஸிங். என்ன ஒரு அலப்பரைங்கறீங்க !!!! கொடுமை என்னான்னா அதுங்க கூட ஏகப்பட்ட வில்லன்கள், சாரி ஹீரோக்கள் :))) நல்ல பிள்ளையாய் படத்த பார்த்துட்டு வந்தோம்.

இந்த நினைவுகளுக்கு இட்டுச் சென்ற ஸ்டில்லை வெகு சீக்கிரம் விட மனம் வரவில்லை. அதனால் வரையலாம் என இரண்டு நாட்களுக்கு முன்னர் அமர்ந்தேன். சார்க்கோல் பயன்படுத்தியதில்லை இதுவரை. அதுவும் வாங்கி ரொம்ப நாளா சும்மா கிடக்குது. சரினு அதை மீடியமாக பயன்படுத்தலாம் என்று நினைத்துக் கொண்டேன்.

படம் 10"x8" அளவு. முதல் நாள் பென்சிலில் கட்டம் கட்டி, அவுட்லைன் போடறதுக்கே மூன்று மணி நேரங்கள் பிடித்தது. பின் சார்க்கோல் கொண்டு தலைமுடிக்கு டை அடித்தேன் :) ஓரளவு நன்றாக வந்திருந்தது. அத்தோடு நிறுத்திக் கொண்டேன்.

நேற்று, நெற்றியில் சார்க்கோல் வைக்க, கரி அப்பியது போல் ஆகிவிட்டது. கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. போச்சு, அவ்வளவு தான் என்று நினைக்க, சரி ஒரு ட்ரை விடலாம் என அழிப்பான் கொண்டு முயற்சித்தேன். கரி கரைந்து மிருதுவானது. அப்பாடா, பிழைத்தது படம் :)

கண்ணாடி மட்டும் சார்க்கோலிட்டு, அப்படியே பென்சிலுக்கு தாவினேன். ஷேட்ஸ் முழுதும் 2B to 6B பென்சில்கள். பின் டச்சப், பள்ளிகளில் செய்வோமே, அதே தான். பேப்பர் கிழித்து, சிறு துண்டுகளாய் மடக்கி, அப்படியே அழுத்தி அழுத்தி இழுக்கறது :)

முகம், கழுத்து, மாலைகள், பனியன், கை விரல்கள், வாட்ச் என எல்லா ஷேட்ஸ் முடிக்க ஒரு ஐந்து மணி நேரம் ஆனது.

இன்று, சுற்றிலும் உள்ள‌ கோடுக‌ளை அழித்து, லேசான‌ ட‌ச்ச‌ப் செய்து முடிக்க‌ ஒரு அரை ம‌ணித்துளிக‌ள். அப்புற‌ம் ஸ்கேன் ப‌ண்ணி, இப்ப‌ உங்க‌ள் பார்வைக்கு ந‌ம்ம 'சூப்ப‌ர் ஸ்டார் குசேல‌ன்'.

ம‌ற‌க்காம‌ ப‌ட‌த்த‌ பெரிது ப‌ண்ணி பாருங்க‌.