Sunday, December 28, 2008

சந்தை - Water Color

என்பத்து ஒன்பதில் வரைந்த படம். அப்பொழுது வந்த காலண்டர் எல்லாமே அற்புதமாய், ஏதாவது ஒரு விதத்தில் நம் அனைவரையும் ஈர்ப்பதாகவே இருக்கும். அப்படி ஒரு காலண்டரில், இந்தப் படம் பார்க்கும் போதே, அதன் வண்ணக்கலவையில் மனம் கரைய, ப்ரஷ் பிடித்தேன்.

ரொம்ப அற்புதமா வந்திருக்கு என்றெல்லாம் சொல்லவில்லை. இன்னும் நல்லா ஃபினிஷிங் செய்திருக்கலாம். நிறைய தண்ணி போட்டா, பேப்பர் ஆட ஆரம்பிக்குமே என்று டச்சப் செய்யத் தோன்றவில்லை :))



படத்தைப் பார்த்து, அப்படியே ஒரு வரி, எப்படி இருக்குனு சொல்லிட்டுப் போங்க :))

Thursday, December 25, 2008

இவரைத் தெரிகிறதா ?



தொன்னூற்றி ஆறில் வரைந்த படம். 'இந்தியன்' திரைப்படம் வந்த காலகட்டமும் இதுவாகத் தான் இருக்கும். பிரமாண்டத்தை (மட்டுமே) எடுக்கும் இயக்குனரின் கைவண்ணத்தில், வித்தியாசமான கதைக் களத்தில் வந்த படம்.

இந்தியன் தாத்தா வேடத்தில் கமல் கலக்கியிருப்பார். அவரின் நடிப்பு மிக மிகக் குறைவு தான் இந்த வேடத்திற்கு. கேரக்டரின் வெற்றியை, லாவகமாக மேக்கப் கைப்பற்றியது என்று தான் சொல்லணும். அதே இன்ஸ்பிரேஷனில், நார்மல் 2b பென்சில் கொண்டு வரைந்த படம்.

Sunday, December 14, 2008

ஜோக்'கடி'க்க வாரீகளா ? (நள பாகம் !)

குமுதம், விகடன் படிக்கும்போது, நாமெல்லாம் ஜோக் படித்து, சிரித்து மகிழ்ந்து செல்வோம். ஆனா அந்த ஓவியங்களுக்கு ரொம்ப முக்கியத்துவம் தருவதில்லை. அவற்றை பார்க்கும்போது, ரொம்ப எளிதா இருந்தாலும், வரையும் போது தான் அதன் சூட்சுமம் புரியும்.

ஓவியர் சித்தார்த் அவர்களின் பரம ரசிகன் நான். தொன்னூறுகளில், அவரின் படங்களைப் பார்த்து வரைந்த ஏராளமானவற்றுள், ஓரளவுக்கு ஒற்றுமையுள்ள இரண்டு படங்களுக்கு ஜோக்'கடி'க்கலாம் வாங்க :)))



என்னத்த படிச்சாலும் ஒரு சாம்பார் ஒழுங்கா வைக்கத் தெரியுதா ? இந்த ஷோவுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல !!!!

உங்கள் க்ரியேட்டிவிட்டியையும் பின்னூட்டுங்கள்.

Sunday, November 9, 2008

நந்தி - Water Color



அநேகமா எல்லா சிவன் கோவில்களிலும், சிவனைப் பார்க்கறோமோ இல்லையோ, நந்தியைக் பார்க்காமல் இருக்க முடியாது. சிவனைப் பார்க்கறதுக்கே இவர் கிட்ட பர்மிஷன் வாங்கி தான் பார்க்கணும் என்று நம் முன்னோர்கள் சொல்வார்கள்.

பொதுவாக, யாராவது குறுக்கே வந்தால், 'நந்தி மாதிரி ஏன் வழி மறிக்கிறாய்' என்று நையாண்டியும் செய்வார்கள்.

ஆத்திகமோ, நாத்திகமோ ... பார்த்தவுடன் பிடித்து வரைந்த படங்களுள் இந்த நந்தி தேவனும் ஒன்று, வருடம் 1992. அப்பதான் ப்ரஷ் பிசிறில்லாமல் என் கைக்குப் பழகிய நேரம். அதனால், பென்சில் அவுட்லைன் போடாமல், ப்ரஷ் கொண்டு வரைந்த சிம்பிளான ஓவியம்.

Sunday, November 2, 2008

அமலா என்றால் அழகு - water color solo

தொன்னூறுகளில், அநேக தமிழ் நெஞ்சங்களைக் கவர்ந்த சிறப்பான நடிகையாகத் திகழ்ந்தவர் அமலா. ஏதோ ஒரு அழகு அவரை மற்ற நடிகைகளிடம் இருந்து வேறுபடுத்தியது. ஐரிஷ் ஜீனாகக் கூட இருக்கலாம் :) அவரது கொஞ்சு தமிழும் மேலும் அழகு சேர்த்தது.

ஒரு புத்தகத்தில் பார்த்து இந்தப் படம் அப்போது வரைந்தேன். பென்சில் அவுட்லைன் போட்டு, ஒரே வர்ணம், வேறு வேறு ஷேட்கள், அவ்வளவு தான். கொஞ்சம் சிரத்தை எடுத்து ஸ்மட்ஜ் செய்திருக்கலாம். அப்போது முடியவில்லை. இப்போது தொட்டால் கிழியும் நிலையில் இருக்கிறது பேப்பர். அதனால் விட்டுவிட்டேன்.

படத்தைப் பார்த்து உங்கள் கருத்துக்களை மறவாமல் தெரிவியுங்கள்.

Sunday, October 12, 2008

கலைவாணி - Single line drawing

தொன்னூற்றி இரண்டுகளில் சென்னையில் வசித்த போது இந்தப் படத்தின் நகல் கிடைத்தது. அப்போது பொறுமையாக வரைய முடியவில்லை.

நெற்றி திலகத்தில் ஆரம்பித்து, முகம், தலை, வலது தோள், கைகள், இசைக் கருவி, இடது கைகள், கால், தாமரை, வலது கால், மீண்டும் தாமரை என்று வந்து அழகாக ஒரே கோட்டில் முடியும் படம். இப்படத்தை முதலில் வரைந்த ஓவியரின் திறமையை எண்ணினால் இன்றும் வியப்பே மிஞ்சுகிறது !!!

இப்போது கிடைத்த சில மணித்துளிகளில் அந்தப் படத்தைப் பார்த்து வரைந்தேன். வழக்கம் போல, படத்தைப் பற்றின உங்கள் கருத்துக்களை மறவாமல் தெரிவியுங்கள்.

Wednesday, July 2, 2008

குசேலா ..... இக்கடச் சூசூசூடு !



வழக்கம் போல ரஜினியின் இந்தப் படத்திற்கும் ஏகப்பட்ட விளம்பரங்கள் வந்து கொண்டிருக்க ... சில வாரங்கள் முன்னர், என் நண்பன் ஒருவன் குசேலன் ஸ்டில்ஸ் அனுப்பியிருந்தான். படங்களைப் பார்க்கும்போதே தெரிந்தது இந்தப்படமும் சூப்பர் ஹிட் தான் என்று. அந்த அளவிற்கு அசத்தல். (ச‌மீபத்தில் பாடல்கள் கேட்டதில் இருந்து இந்த நம்பிக்கையில் சற்று சருக்கல் !)

அண்ணாமலை, எஜமான் டைப்ல ஸ்டில்ஸ் வருதேனு பார்த்துக்கிட்டே வந்தா, சட்டென நம்மை ஈர்த்தது இந்த 'ராஜாதி ராஜா' ஸ்டைல் ஸ்டில்.

கொசுவத்தி : எண்ணிக்கையில்லாமல் அந்த ஸ்டில்ல எத்தன முறை நண்பர்களுக்கு வரைந்து தந்திருப்பேன். அப்போது கல்லூரி பருவம். தேவகோட்டையிலிருந்து, காரைக்குடி சென்றோம் நண்பர்கள் சிலர். பாண்டியன் தியேட்டர் என நினைக்கிறேன். என்னா கூட்டம். அழகப்பா என்ஜினியரிங் மாணவிகள் அத்தனை பேரும் அங்கு தான். அட போங்கப்பா, சென்னையாவது, மும்பையாவது. நுனி நாக்கு ஆங்கிலம், வெள்ளைத் தோல், அட்டகாச ட்ரெஸ்ஸிங். என்ன ஒரு அலப்பரைங்கறீங்க !!!! கொடுமை என்னான்னா அதுங்க கூட ஏகப்பட்ட வில்லன்கள், சாரி ஹீரோக்கள் :))) நல்ல பிள்ளையாய் படத்த பார்த்துட்டு வந்தோம்.

இந்த நினைவுகளுக்கு இட்டுச் சென்ற ஸ்டில்லை வெகு சீக்கிரம் விட மனம் வரவில்லை. அதனால் வரையலாம் என இரண்டு நாட்களுக்கு முன்னர் அமர்ந்தேன். சார்க்கோல் பயன்படுத்தியதில்லை இதுவரை. அதுவும் வாங்கி ரொம்ப நாளா சும்மா கிடக்குது. சரினு அதை மீடியமாக பயன்படுத்தலாம் என்று நினைத்துக் கொண்டேன்.

படம் 10"x8" அளவு. முதல் நாள் பென்சிலில் கட்டம் கட்டி, அவுட்லைன் போடறதுக்கே மூன்று மணி நேரங்கள் பிடித்தது. பின் சார்க்கோல் கொண்டு தலைமுடிக்கு டை அடித்தேன் :) ஓரளவு நன்றாக வந்திருந்தது. அத்தோடு நிறுத்திக் கொண்டேன்.

நேற்று, நெற்றியில் சார்க்கோல் வைக்க, கரி அப்பியது போல் ஆகிவிட்டது. கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. போச்சு, அவ்வளவு தான் என்று நினைக்க, சரி ஒரு ட்ரை விடலாம் என அழிப்பான் கொண்டு முயற்சித்தேன். கரி கரைந்து மிருதுவானது. அப்பாடா, பிழைத்தது படம் :)

கண்ணாடி மட்டும் சார்க்கோலிட்டு, அப்படியே பென்சிலுக்கு தாவினேன். ஷேட்ஸ் முழுதும் 2B to 6B பென்சில்கள். பின் டச்சப், பள்ளிகளில் செய்வோமே, அதே தான். பேப்பர் கிழித்து, சிறு துண்டுகளாய் மடக்கி, அப்படியே அழுத்தி அழுத்தி இழுக்கறது :)

முகம், கழுத்து, மாலைகள், பனியன், கை விரல்கள், வாட்ச் என எல்லா ஷேட்ஸ் முடிக்க ஒரு ஐந்து மணி நேரம் ஆனது.

இன்று, சுற்றிலும் உள்ள‌ கோடுக‌ளை அழித்து, லேசான‌ ட‌ச்ச‌ப் செய்து முடிக்க‌ ஒரு அரை ம‌ணித்துளிக‌ள். அப்புற‌ம் ஸ்கேன் ப‌ண்ணி, இப்ப‌ உங்க‌ள் பார்வைக்கு ந‌ம்ம 'சூப்ப‌ர் ஸ்டார் குசேல‌ன்'.

ம‌ற‌க்காம‌ ப‌ட‌த்த‌ பெரிது ப‌ண்ணி பாருங்க‌.