Sunday, November 9, 2008

நந்தி - Water Color



அநேகமா எல்லா சிவன் கோவில்களிலும், சிவனைப் பார்க்கறோமோ இல்லையோ, நந்தியைக் பார்க்காமல் இருக்க முடியாது. சிவனைப் பார்க்கறதுக்கே இவர் கிட்ட பர்மிஷன் வாங்கி தான் பார்க்கணும் என்று நம் முன்னோர்கள் சொல்வார்கள்.

பொதுவாக, யாராவது குறுக்கே வந்தால், 'நந்தி மாதிரி ஏன் வழி மறிக்கிறாய்' என்று நையாண்டியும் செய்வார்கள்.

ஆத்திகமோ, நாத்திகமோ ... பார்த்தவுடன் பிடித்து வரைந்த படங்களுள் இந்த நந்தி தேவனும் ஒன்று, வருடம் 1992. அப்பதான் ப்ரஷ் பிசிறில்லாமல் என் கைக்குப் பழகிய நேரம். அதனால், பென்சில் அவுட்லைன் போடாமல், ப்ரஷ் கொண்டு வரைந்த சிம்பிளான ஓவியம்.

Sunday, November 2, 2008

அமலா என்றால் அழகு - water color solo

தொன்னூறுகளில், அநேக தமிழ் நெஞ்சங்களைக் கவர்ந்த சிறப்பான நடிகையாகத் திகழ்ந்தவர் அமலா. ஏதோ ஒரு அழகு அவரை மற்ற நடிகைகளிடம் இருந்து வேறுபடுத்தியது. ஐரிஷ் ஜீனாகக் கூட இருக்கலாம் :) அவரது கொஞ்சு தமிழும் மேலும் அழகு சேர்த்தது.

ஒரு புத்தகத்தில் பார்த்து இந்தப் படம் அப்போது வரைந்தேன். பென்சில் அவுட்லைன் போட்டு, ஒரே வர்ணம், வேறு வேறு ஷேட்கள், அவ்வளவு தான். கொஞ்சம் சிரத்தை எடுத்து ஸ்மட்ஜ் செய்திருக்கலாம். அப்போது முடியவில்லை. இப்போது தொட்டால் கிழியும் நிலையில் இருக்கிறது பேப்பர். அதனால் விட்டுவிட்டேன்.

படத்தைப் பார்த்து உங்கள் கருத்துக்களை மறவாமல் தெரிவியுங்கள்.

Sunday, October 12, 2008

கலைவாணி - Single line drawing

தொன்னூற்றி இரண்டுகளில் சென்னையில் வசித்த போது இந்தப் படத்தின் நகல் கிடைத்தது. அப்போது பொறுமையாக வரைய முடியவில்லை.

நெற்றி திலகத்தில் ஆரம்பித்து, முகம், தலை, வலது தோள், கைகள், இசைக் கருவி, இடது கைகள், கால், தாமரை, வலது கால், மீண்டும் தாமரை என்று வந்து அழகாக ஒரே கோட்டில் முடியும் படம். இப்படத்தை முதலில் வரைந்த ஓவியரின் திறமையை எண்ணினால் இன்றும் வியப்பே மிஞ்சுகிறது !!!

இப்போது கிடைத்த சில மணித்துளிகளில் அந்தப் படத்தைப் பார்த்து வரைந்தேன். வழக்கம் போல, படத்தைப் பற்றின உங்கள் கருத்துக்களை மறவாமல் தெரிவியுங்கள்.

Wednesday, July 2, 2008

குசேலா ..... இக்கடச் சூசூசூடு !



வழக்கம் போல ரஜினியின் இந்தப் படத்திற்கும் ஏகப்பட்ட விளம்பரங்கள் வந்து கொண்டிருக்க ... சில வாரங்கள் முன்னர், என் நண்பன் ஒருவன் குசேலன் ஸ்டில்ஸ் அனுப்பியிருந்தான். படங்களைப் பார்க்கும்போதே தெரிந்தது இந்தப்படமும் சூப்பர் ஹிட் தான் என்று. அந்த அளவிற்கு அசத்தல். (ச‌மீபத்தில் பாடல்கள் கேட்டதில் இருந்து இந்த நம்பிக்கையில் சற்று சருக்கல் !)

அண்ணாமலை, எஜமான் டைப்ல ஸ்டில்ஸ் வருதேனு பார்த்துக்கிட்டே வந்தா, சட்டென நம்மை ஈர்த்தது இந்த 'ராஜாதி ராஜா' ஸ்டைல் ஸ்டில்.

கொசுவத்தி : எண்ணிக்கையில்லாமல் அந்த ஸ்டில்ல எத்தன முறை நண்பர்களுக்கு வரைந்து தந்திருப்பேன். அப்போது கல்லூரி பருவம். தேவகோட்டையிலிருந்து, காரைக்குடி சென்றோம் நண்பர்கள் சிலர். பாண்டியன் தியேட்டர் என நினைக்கிறேன். என்னா கூட்டம். அழகப்பா என்ஜினியரிங் மாணவிகள் அத்தனை பேரும் அங்கு தான். அட போங்கப்பா, சென்னையாவது, மும்பையாவது. நுனி நாக்கு ஆங்கிலம், வெள்ளைத் தோல், அட்டகாச ட்ரெஸ்ஸிங். என்ன ஒரு அலப்பரைங்கறீங்க !!!! கொடுமை என்னான்னா அதுங்க கூட ஏகப்பட்ட வில்லன்கள், சாரி ஹீரோக்கள் :))) நல்ல பிள்ளையாய் படத்த பார்த்துட்டு வந்தோம்.

இந்த நினைவுகளுக்கு இட்டுச் சென்ற ஸ்டில்லை வெகு சீக்கிரம் விட மனம் வரவில்லை. அதனால் வரையலாம் என இரண்டு நாட்களுக்கு முன்னர் அமர்ந்தேன். சார்க்கோல் பயன்படுத்தியதில்லை இதுவரை. அதுவும் வாங்கி ரொம்ப நாளா சும்மா கிடக்குது. சரினு அதை மீடியமாக பயன்படுத்தலாம் என்று நினைத்துக் கொண்டேன்.

படம் 10"x8" அளவு. முதல் நாள் பென்சிலில் கட்டம் கட்டி, அவுட்லைன் போடறதுக்கே மூன்று மணி நேரங்கள் பிடித்தது. பின் சார்க்கோல் கொண்டு தலைமுடிக்கு டை அடித்தேன் :) ஓரளவு நன்றாக வந்திருந்தது. அத்தோடு நிறுத்திக் கொண்டேன்.

நேற்று, நெற்றியில் சார்க்கோல் வைக்க, கரி அப்பியது போல் ஆகிவிட்டது. கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. போச்சு, அவ்வளவு தான் என்று நினைக்க, சரி ஒரு ட்ரை விடலாம் என அழிப்பான் கொண்டு முயற்சித்தேன். கரி கரைந்து மிருதுவானது. அப்பாடா, பிழைத்தது படம் :)

கண்ணாடி மட்டும் சார்க்கோலிட்டு, அப்படியே பென்சிலுக்கு தாவினேன். ஷேட்ஸ் முழுதும் 2B to 6B பென்சில்கள். பின் டச்சப், பள்ளிகளில் செய்வோமே, அதே தான். பேப்பர் கிழித்து, சிறு துண்டுகளாய் மடக்கி, அப்படியே அழுத்தி அழுத்தி இழுக்கறது :)

முகம், கழுத்து, மாலைகள், பனியன், கை விரல்கள், வாட்ச் என எல்லா ஷேட்ஸ் முடிக்க ஒரு ஐந்து மணி நேரம் ஆனது.

இன்று, சுற்றிலும் உள்ள‌ கோடுக‌ளை அழித்து, லேசான‌ ட‌ச்ச‌ப் செய்து முடிக்க‌ ஒரு அரை ம‌ணித்துளிக‌ள். அப்புற‌ம் ஸ்கேன் ப‌ண்ணி, இப்ப‌ உங்க‌ள் பார்வைக்கு ந‌ம்ம 'சூப்ப‌ர் ஸ்டார் குசேல‌ன்'.

ம‌ற‌க்காம‌ ப‌ட‌த்த‌ பெரிது ப‌ண்ணி பாருங்க‌.

Friday, May 2, 2008

1. ஜோக்(கடி)க்க வாரீயளா

வரையறதுல இருக்கற நுட்பம், வண்ணம் தீட்டுவதில் இல்லை என்பது எனது தாழ்மையான எண்ணம். ஏனெனில் கோடுகள் மட்டுமே பிரதானமாய் இருக்கும் பட்சத்தில் பொருமையாய் வரைவது சற்று சிரத்தையான காரியம் !

நாம் பத்திரிகைகளில் படிக்கும் (பார்க்கும்) கார்ட்டூன் ஜோக்குகள் அதே ரகம் தான். பார்க்க எளிதாய் தோன்றினாலும் வரைந்து பார்க்கும்போது தான் அதன் சூட்சுமம் புரியும். நிறைய ஜோக்குகளில் வந்த படங்கள் வரைந்திருக்கிறேன். அவற்றை ஒவ்வொன்றாய் பதிகிறேன். இது முதல் படம். பத்திரிகையில் என்ன ஜோக் என்று நினைவில் இல்லை. எனது எண்ணத்தில்:



"கஸ்டமர் புடி கஸ்டமர் புடினு கஷ்டப்படுத்தினீங்களே, நீங்களே வந்து பாருங்க, கலெக்ஷன் ஆனா தான் க்ரெடிட் கார்ட் ட்யூ கட்ட முடியும்னு சொல்றாங்க !"

உங்கள் மனதில் தோன்றுவதையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

Friday, April 18, 2008

Calla Lily - Oil on Canvas

பல ஆண்டுகளாக வாட்டர் கலர் பயன்படுத்தி, அக்ரிலிக்கும் பயன்படுத்தி வந்திருக்கிறேன். ஆனால் இந்த ஆயில் பெயிண்டிங் மட்டும் பயன்படுத்தியதில்லை. ஒவ்வொரு முறையும் யோசித்து, அப்படியே விட்டுவிடுவேன்.

சமீபத்தில் (அலுவலக நிமித்தம்) ஒரு வகுப்பில், "நீங்கள் உங்கள் ஊக்கத்தை பன்மடங்கு பெருக்கி, தள்ளிப் போட்டு வந்த ஒரு காரியத்தை முடிப்பதாய் உறுதி எடுத்துக் கொள்ளுங்கள். ஐந்து வாரங்கள் கழித்து அதை நிறைவேற்றிய விதத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்" என்றனர். நமக்குத் தான் எல்லாத்துக்கும் ஒரு காரணம் வேண்டுமே :) இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி உறுதி எடுத்துக் கொண்டேன்.

அலைந்து திரிந்து ஆயில் பெயிண்டிங்க் தேவையானவை எல்லாம் வாங்கி, அதன் நுணுக்கங்களை இணையத்தின் வழி கற்று, இந்த "கேலா லிலி" வரைய அமர்ந்தேன். இரண்டு நாட்கள், சுமார் ஐந்து ஐந்து மணி நேரம் எடுத்தது படத்தை முடிக்க. ஆனால் வண்ணம் காய்வதற்கு ஐந்தாறு நாட்கள் ஆனது.

ஓரளவுக்கு 'லிலி' நினைத்த‌தை விட நன்றாக‌ வந்திருந்தது. படத்தை வகுப்பறையில் காண்பித்தபோது, ஒரே ஆரவாரம் தான் (அந்த அளவிற்கு படம் இல்லை என்பது உண்மை ;)). ஆனால் மனம் மிக திருப்தியானது அன்று.



படத்தைப் பெரிது செய்து பார்த்து, உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Saturday, April 5, 2008

கார்மேகக் கண்ணா - பேனா எண்ணம், கணினி வண்ணம்


(மறவாமல் படத்தைப் பெரிதுபடுத்திப் பாருங்கள்)

பதினோரு ஆண்டுகள் முன்னர் (1997ல்) பேனா கொண்டு வரைந்த படம். ஓவியர் ம.செ. அவர்கள் மிக அற்புதமாக கிருஷ்ணரை வரைந்திருந்தார். படத்தில் ஒரு வசீகரம் இருப்பதை உணர்ந்து, நாமும் வரையலாம் என்று அதைப் பார்த்து வரைந்தேன்.

வண்ணம் தீட்டாத அந்தப் படத்தை, தற்போது கணினி உதவியுடன் சுமாராக வண்ணம் தீட்டியிருக்கிறேன்.

படம் எப்படி இருக்கிறதென்று வழக்கம்போல உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.