Friday, January 29, 2010

யானை - Pen Sketch



"கஜமுகனைக் காணுகையில் என்ன ஒரு கம்பீரம். அகண்ட முறமெனக் காதும், மாமலை எனப் பெருத்த உடலும், கற்தூண்களெனக் கால்களில் வீரு கொண்ட நடையும் ... சிறியவர் முதல் பெரியவர் வரை சட்டென எவரையும் கவர்ந்திடுமே".
நேற்றுக் கிடைத்த சிறு இடைவெளியில் வரைந்த இரண்டாவது படம். 10x8 வரைதாளில் அரை மணிநேரத்தில் பேனா கொண்டு அவுட்லைன் போட்டு, பின்னர் ஷேட்ஸ். அவ்ளோதான் :)

சிம்பான்ஸி - Pen sketch



"என்னைக் கொஞ்சம் நிம்மதியாத் தூங்க விடுங்களேன். மனிதனா மாறி உங்களைப் போல அல்லல் பட நான் ரெடி இல்ல, ரெடி இல்ல, ரெடி இல்ல ..."

ரொம்ப நாள் ஆச்சே என நேற்று வரைய அமர்ந்தேன். வழக்கம் போல நூலக புத்தகங்கள் இரைந்து கிடக்க, நமக்கு வசதியாய் இருக்கும் இரண்டு படங்களைத் தேர்வு செய்து கொண்டேன். முதலில் 'நம்மவர்'. அசத்தலாகப் படுத்திருக்கும் அந்தச் சாயலே படத்தை வரையத் தூண்டியது.

10x4 வரைதாளில் அரை மணிநேரத்தில் பேனாவில் சிம்பன்ஸியின் ஆனந்த சயனம் :)

Wednesday, April 1, 2009

மனம் கவர்ந்த ஓவியர்கள்

ஒருவர் கையெழுத்தை வைத்து இன்னார் எழுதினார் என்று கண்டுபிடிக்கிறது ஓரளவுக்கு சுலபம் தான். சில நேரங்களில், இது அச்சு அசல் அவரோட கையெழுத்து மாதிரியே இருக்கே என்று நம் நண்பர்கள் சொல்லிக் கேள்விப் படுகிறோம், அல்லது நாமே பார்க்கிறோம். ஆனால் ஓவிய‌த்தைப் பொருத்த‌வ‌ரையில், இவர் அவ‌ர் மாதிரியே வ‌ரைகிறார் என்று இது வ‌ரை நாம் கேள்விப்பட்டதில்லை.

ஒவ்வொருத்தரும் தங்களுக்கென்று த‌னி ஸ்டைல் வ‌குத்துக் கொண்டார்க‌ள். எப்ப‌டி இந்த‌ மாதிரி ஒரு நிலை ஏற்ப‌டுத்திக் கொண்டார்க‌ள் என்று ப‌ல‌ நாள் விய‌ந்திருக்கிறேன். கையெழுத்துப் போடுவ‌து கூட‌ ஒரு க‌லை தான். சில‌ர் கையெழுத்து அட்ட‌காச‌மா இருக்கும். ரூம் போட்டு, ப்ராக்டிஸ் ப‌ண்ணிருப்பார்க‌ளோ என்று கூட எண்ண‌த் தோன்றும். அதே போல‌ ஓவிய‌ர்க‌ளும் சில‌ ப‌யிற்சிக‌ள் மேற்கொண்டிருக்க‌லாம், வித‌ வித‌மா வ‌ரைந்து பார்த்து, ஒரு க‌ட்ட‌த்தில் திருப்தி ஏற்ப‌டுகையில், அதையே base style ஆக‌ ஆக்கியிருக்க‌லாம் என்று பின்னாளில் அறிந்து கொண்டேன்.

அந்த கால கட்டத்தில, ஆயிரத்து தொள்ளாயிரத்து என்பதுகளில் இருந்து இன்றுவரை கொடிகட்டிப் பறந்த / பறக்கும் ஓவியர்களைப் பற்றி:

ஓவியர் ஜெயராஜ், 'ஜெ...' என்று மூன்று புள்ளிக‌ள் வைத்து ஆர‌ம்பித்தார் என்று நினைவு. எல்லோரும் கையெழுத்து போடும் போது, அப்ப‌டி ஒரு கோடு போட்டு, கீழே ரெண்டு புள்ளி வைப்பார்க‌ள். அது போல‌த் தான் இவ‌ர் மூன்று புள்ளிக‌ள் வைக்கிறார் என்று எண்ணினேன். பின் ஒரு பேட்டியில், அவ‌ரே சொல்லியிருந்தார், அது அவ‌ர் குடும்ப‌ உறுப்பின‌ர்க‌ளின் எண்ணிக்கை என்று. சிம்ப்ளி சூப்ப‌ர். அப்புற‌ம் குடும்ப‌ம் பெரிதாக‌ ஆக‌ புள்ளிக‌ள் கூடிக் கொண்டே சென்ற‌தைப் பார்த்தேன். 'ஜெ'வின் ஓவியங்கள் அருமையான உருவங்கள் மற்றும் அதன் shades கொண்டு நம் கண்களைக் கவரும். செக்ஸியா வரையறதிலும் இவரை அடித்துக் கொள்ள ஆளில்லை அப்போது. சில strokes தான், படம் அப்படி ஒரு attractive-ஆ இருக்கும்.




உருவங்களுக்கு எந்த அளவிற்கு ஜெ முக்கியத்துவம் கொடுத்தாரோ, அந்த அளவிற்கு முகபாவத்திற்கு முக்கியத்துவம் தந்தவர் ஓவியர் மாருதி. சீற்றம், நாணம், அமைதி, வேகம், என்று இப்படி எந்த ஒரு ஓவியத்தை எடுத்தாலும், முதலில் நம்மைக் கவருவது அந்த முக பாவங்கள். அத்தனை தத்ரூபமாக வரைந்திருப்பார். வண்ணக் கலவையும் bold-ஆ இருக்கும்.




கார்ட்டூன்களில் ஓவியர் மதன் இன்றும் உயரத்தில் இருப்பதை நாம் யாரும் மறுக்க முடியாது. ஏழை விவசாயி ஆகட்டும், வாழும் பெரும்புள்ளி ஆகட்டும், அவரது கார்ட்டூன் பார்க்கும் போதே நம்மில் ஒரு சிறு புன்முறுவலாவது உதிர்வது உறுதி. ஓவியத்தையும் தாண்டி வரலாற்று படைப்புக்கள், கேள்வி பதில் என்று மேலும் தன்னை மெறுகேற்றிக் கொண்டவர்.




ஆரம்ப காலங்களில் ம‌.செ. அவர்களின் ஓவியங்கள் அந்த அளவிற்கு சிறப்புடையதாய் இல்லை என்றே சொல்ல வேண்டும். கல்கியின் பல காவியங்களுக்கு ஓவியம் தீட்டிய மணியம் அவர்களின் புதல்வர். நாள் செல்லச் செல்ல ம.செ.வின் ஓவியத்தில் அப்படி ஒரு perfection. அதற்கப்புறம் தன் ஓவியங்களில் பல‌ அற்புதங்கள் படைத்தவர். சாந்தம், நளினம், இறையவர்கள் என்று உருவங்களிலும் மற்றும் வண்ணக் கலவையிலும் மெலோடியான ஓவியர். இவரது ஒரு கிருஷ்ணர் ஓவியம் பார்த்து, வரைந்து இத்தளத்தில் பதிந்திருக்கிறேன்.




கார்ட்டூனிஸ்ட் சித்தார்த் அவர்களின் பல கார்ட்டூன்களைப் பார்த்து நான் வியந்திருக்கிறேன், பின் வரைந்திருக்கிறேன். கார்ட்டூன் என்று கண்டபடி கோடுகள் போடாமல் அற்புதமாக‌ வரையும் ஓவியர். 'சிம்பிள் தான் சூப்பர்' என்று இவரது கார்ட்டூன்களைப் பார்க்கும் போது நமக்குப் புரியும். சிம்பிளான கார்ட்டூன்களிலும் கூட சிறு சிறு செய்திகளையும் சேர்த்து ஒரு நேர்த்தியாகப் படைப்பதில் வல்லவர். இவரோட இன்ஸ்பிரேஷனில் வரைந்த படங்கள் சிலவற்றை இத்தளத்தில் பதிந்திருக்கிறேன்.




Abstract ஓவியங்களைப் பார்க்கையில் Modern Art அவ்வளவாகப் பிடிப்பதில்லை. நம் இஷ்டத்திற்கு ஒன்று வரைந்து, பிறருக்குப் புரியாத காரணத்தால் அதற்கு நேர் மாறாய் நிறைய விளக்கங்களும் தரலாம் என்பது என் தாழ்மையான கருத்து. ஆனால் மருது அவர்களின் கோட்டோவியங்கள் சில நேரம் நின்று பார்க்க வைக்கும். பென்சில் கொண்டு அவ்வளவு நேர்த்தியா கோடு போடுவதே கடினம். இவர் என்னடா என்றால் ப்ரஷ் கொண்டு விளாசி அற்புதமாய்க் கோட்டோவியம் போடுகிறார் என்று வியந்தது உண்டு.



ஓவியர் அர்ஸ் படங்களும் ஆரம்பத்தில் அத்தனை ஈர்ப்புடையதாய் இல்லை. போகப் போக பல வித்தியாசங்கள் காண்பித்தவர். தொடர்கதைளில் கூட வித்தியாசமாகப் படம் வரைந்தவர். அதாவது ஒரு படத்தைப் பார்த்தால், அது இந்தத் தொடருக்கு வரைந்தது என்று கூறலாம். உருவங்கள், வண்ணங்கள் என்றில்லாமல், texture-லும் வித்தியாசம் காண்பித்தவர்.



சிறு வயதில் வாரப் பத்திரிகை என்று படித்தால் அது கல்கண்டு தான். அப்பா தான் படிக்கத் தூண்டினார். நிறைய தகவல்கள் அதில் இருந்து தெரிந்து கொள்ளலாம் என்று. நமக்குப் பிடிச்சதோ அதில் வரும் தொடர்கதை. எழுதியவர் தமிழ்வாணனா அல்லது அவர் புதல்வர் லேனாவா என்று நினைவில் இல்லை. அதற்குப் படங்கள் வரைந்தவர் ஓவியர் ராமு. குடும்பப் படங்கள் என்றால் நினைவில் வருபவர். கதாபாத்திரங்கள் நம் மனதில் அழுத்தமாக பதியுமாறு இருப்பதற்கு இவரின் ஓவியமும் ஒரு காரணமாக இருக்கும்.



இவர்கள் அனைவரையும் பற்றி சுருக்கமாக‌ச் சொல்ல வேண்டுமெனில்:

ஜெ - Soft & Sexy
மாருதி - Aggresive
மதன் - Captive Cartoons
ம.செ. - Mild & Sweet
சித்தார்த் - Creative Cartoons
மருது - Line dance
அர்ஸ் - Tender
ராமு - Old is Gold

இன்னும் பலர் இருக்கலாம். ஓவியர்கள் என்றவுடன் சட்டென்று மனதில் தோன்றியவர்களைப் பற்றி எனது எண்ணத்தை எழுதியிருக்கிறேன். உங்களுக்குப் பிடித்த/தெரிந்த ஓவியர்களைப் பற்றி பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

Sunday, February 15, 2009

காளான்கள் - Water color



வழக்கம் போல கைநிறைய புத்தகங்கள் எடுத்து வந்தேன் நூலகத்தில் இருந்து. நல்ல படமா இருக்கணும், வரையறதுக்கும் எளிதா இருக்கணும் என்ற கோணத்திலேயே, எதை வரையலாம் என அத்தனை புத்தகங்களையும் (படம்) பார்த்தேன். இந்த காளான்கள் சட்டென மனதை எட்டிப் பிடித்தன. நினைத்த மாதிரி எளிமையாவும் இருக்க, வரைய அமர்ந்தேன்.

6"x2" கட்டம் கட்டி ஒரு பென்சில் ஸ்கெட்ச். கட்டங்கள் அகற்றி முதலில் ஒரு மெல்லிய செபியா வாஷ் (Brown கலர்). அது காய்ந்தவுடன், அதை விட கொஞ்சம் அடர்த்தியான வாஷ். மூன்றாவது ஆங்காங்கே இருக்கும் மிக அடர்த்தியான Brown மற்றும் Black கலவை. நினைத்த அளவு ஈஸியா இல்லை. இரண்டு மணி நேரங்கள் ஒரே சிந்தனை என கட்டிப் போட்டது காளான்கள் :))

Sunday, February 8, 2009

எங்க வீட்டு குட்டி தேவதை - Charcoal & Pencil



பொதுவா புகைப்படங்கள் பார்த்து வரைந்து பழக்கம் இல்லை. ரொம்ப நாள் முயற்சி செய்யணும் என்ற எண்ணம் காற்றில் கரைந்த வண்ணம் இருந்தது. கரைய விட்டிருவோமா என்ன ?! குசேலனுக்கு அப்புறம், எங்க வீட்டு குட்டி தேவதையின் படம். சக்கி‍சீஸஸில் எடுத்தது. வரைபடம் போலவே இருந்த (இப்ப புரிஞ்சிருக்குமே சூட்சுமம் :))) அந்தப் படம் என்னை வெகுவாக ஈர்த்தது.

வழக்கம் போல கட்டம் கட்டி (5" x 4") 2b பென்சில் அவுட்லைன். பிறகு கட்டமெல்லாம் அகற்றி, சார்கோலில் தலைமுடி. அப்புறம் 2b பென்சிலில் ஷேட்ஸ். பேப்பர் கொண்டு ஷேட்ஸ் நல்லா ப்லென்ட் பண்ண, ஓரளவுக்கு எங்க வீட்டு குட்டி தேவதை போல (90% என்று சொல்லலாம்) வ‌ந்தது படம். எல்லாம் ஒரு மூன்று மணிநேரங்கள் ஆனது.

படத்தை முடித்து, அவங்க கிட்ட ஆவலா காட்டினா, அவங்களுக்கு அந்த அளவிற்கு நிறைவு இல்லை :((

Monday, January 26, 2009

அரசியல் தலைவர்கள் - Caricature

தொன்னூற்றி ஐந்தில், ஆ.வி.யில் உதயன் அவர்களின் கைவண்ணத்தில் வந்த கேரிகேச்சர் ஓவியங்கள். பார்க்கறதுக்கு எளிதாக இருந்தாலும், ஒரு சில வரிகளிலேயே, இன்னார் என்று சொல்லும் அளவிற்கு வரைவது, கேரிகேச்சர் ஓவியங்களின் சிறப்பு எனச் சொல்லலாம்.

உதயன் அவர்களின் ஓவியங்களைப் பார்த்து, பிரமித்து, நான் வரைந்திருக்கிறேன் !!! அப்படியே, எப்படி இருக்குனு 'ஒரு வரி' சொல்லிட்டுப் போங்க ;))









Sunday, January 18, 2009

போகீமான் - Clay



நாம சாக்பீஸ்ல கொட கொடனு கொடயறத பார்த்துட்டு, எங்க வீட்டு குட்டீஸுக்கும் பயங்கர ஆசை. சரி பண்ணுங்கடா பசங்களானு விட்டால், லேசா மூனு மூலையில் கீறிவிட்டு, நட்டக்குத்தா நிக்க வச்சிட்டான் பையன். என்னாடா அதுனு கேட்டால், "ராக்கெட்" என்று பதில் வருகிறது :)))

போன வாரம் ஒரு நாள் "ஹாபி லாபி" போய் நமக்கு ஷாப்பிங் செய்தால், பசங்க அதுங்க பங்குக்கு ஒரு மினி ஷாப்பிங். அவங்க வாங்கியது கலர் கலரா களிமண் !!!

வெள்ளிக் கிழமை ஆரம்பிச்சாங்க. யானை, குதிரை, பூக்கள், பட்டாம்பூச்சி என போய், கடைசியில் அவங்க ஆஸ்தான போக்கீமானில் வந்து நிக்கறாங்க. சிவா தான் எல்லாம், தீக்ஷா அப்பப்ப அண்ணனைப் பார்த்து அதே போல செய்ய முயற்சி செய்வாள்.

வரிசையா செஞ்சு டி.வி. ரேக் மேல அடுக்கிட்டாங்க. அதிலிருந்து மூன்று சிற்பங்கள் உங்கள் பார்வைக்கு. பேர் எல்லாம் நமக்கு வாய்க்குள்ளயே வரமாட்டேன்கிறது. படத்தில இருக்கவங்க டியால்கா, மெகினீயம், க்ரோவைல்.